வழியில் வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி காண்பது ஒரு விதம். மற்றவர்கள் கண்களுக்கு எளிமையாய்த் தென்படும் விஷயங்களில்கூடப் பெரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து, அதன் வழியே வெற்றிபெறுவது இன்னொருவிதம்.

பாறைகள் குவிந்துகிடக்கிற இடம், பார்ப்பவர் கண்களின் தன்மைக்கேற்ப கலைக்கூடமாகவோ குவாரியாகவோ மாறுகிறது.
ஆள்நடமாட்டமில்லாத இடத்தில், விவசாயத்திற்கும் பயனில்லாத வெற்றிட.ம், சிலர் கண்களில் மட்டும் ஓய்வு நேர இல்லங்கள் உருவாக்குவதற்குறிய இடமாகத் தெரிகிறது.
மறந்துவிடாதீர்கள்! ஒரு பொருளோ, இடமோ, மனித ஆற்றலோ நிகழ்காலத்தில் என்னவாக இருக்கிறது என்பதல்ல முக்கியம். எதிர்காலத்தில் என்னவாக வளரும் என்பதுதான் முக்கியம். வாய்ப்புகள் வழியில் வரும்வரை காத்திருக்காமல், விலகிச் செல்லும் வாய்ப்புகளைக்கூட வழிமறித்துப் பயன்படுத்தும் துடிப்பு இருந்தால் இத்தகைய புதுமைகள் புத்தியில் உதிக்கும்.
இப்படிப் புதுமையாய் சிந்திப்பதில் முதல்தடை… விமர்சனங்கள். ஆர்வமாய்ப் புதிய விஷயங்களைச் சொல்ல வருபவர்கள்கூட, விமர்சனங்கள் வந்ததும் துவண்டுவிடுவார்கள்.
அதனால்தான் ஓர் அறிஞர் சொன்னார், “புதுமையாய் சிந்திக்க அறிவு மட்டும் போதாது, துணிவும் அவசியம்” என்று. சமுத்திரம் என்பது குடிக்கப் பயன்படாத தண்ணீர் என்று பார்த்து ஆதிகாலத்தில் அநேகம்பேர் அலட்சியம் செய்திருப்பார்கள்.
அதில் உப்பு இருக்கிறது என்று ஒருவன் முதலில் கண்டுபிடித்திருப்பான், முத்து கிடைக்கிறது என்று இன்னொருவன் கண்டுபிடித்திருப்பான். மீன் பிடித்துச் சாப்பிடலாம் என்று மற்றொருவன் கண்டுபிடித்திருப்பான்.
காலகாலமாய் இருக்கிற கடல், தேவையில்லாத தண்ணீர்ப்பரப்பு என்று விலகி நடக்காமல் வித்தியாசமாய்ச் சிந்தித்தவன்தான் இந்தப் புதுமைகளையெல்லாம் பூமிக்குக் கொடுத்தான்.
இந்தப் புதுமைக் கண்ணோட்டம் என்பது, பணம் சம்பாதிக்கும் முறை என்று மட்டும் பார்த்தால், வளர்ச்சி இருக்காது. புதுமைக் கண்ணோட்ட வழிகள் வாழ்க்கையை சுவாரசியமாக்கிக் கொள்கிற முறை. அதுவே ஒரு வாழ்க்கை முறை.
கண்ணில்படுகிற எதிலும் எண்ணிலடங்காத வாய்ப்புகள் இருக்கின்றன என்கிற நம்பிக்கை இதற்கான முதல் தேவை. சாதாரணமான ஒன்றைக்கூட சுவாரசியமாய் மாற்றுகிற படைப்பாற்றல் இதற்கான இரண்டாவது தேவை. படைப்பாற்றல் என்கிற கண்ணுக்குத் தெரியாத சக்திக்கு சொல்வடிவம் கொடுக்கிற திறமை, இதற்கான மூன்றாவது தேவை. ஒன்றை சுவாரசியமாக சிந்தித்து, செயல்படுத்தும் வரையில் பின்வாங்காத முயற்சியும் உழைப்பும் நான்காவது தேவை.
இந்த அம்சங்களை யாரெல்லாம் வளர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள், அதிசயமான வெற்றிகளை அனாயசமாகப் பெற்று விடுகிறார்கள்.
உங்களுக்குள் ஒரு தீப்பொறி இருந்தால், ஊதி ஊதி வளர்க்க வேண்டியவர் நீங்கள்தான். அது பெருநெருப்பாக உருவம்பெறும்வரை உங்களால்தான் அதைக் காப்பாற்ற முடியும். அதுவரையில் அதன் வெளிச்சம் ஊருக்குத் தெரியாது.
உங்களுக்குள் உதிக்கிற புதிய கண்ணோட்டங்கள் ஒவ்வொன்றுமே அத்தகைய தீப்பொறிகள்தான்.
உற்சாமாய் ஊதி ஊதிப் பெருக்குங்கள்
உங்களால் முடியும்…. கலக்குங்கள்.
- சினேகலதா